
மோசமான வானிலை காரணமாக பாடசாலைகள் மூடப்படும் சூழ்நிலையில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தர பரீட்சைகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக ஒரு விசேட கலந்துரையாடலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வானிலை ஆய்வுத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்தார்.
நாடு முழுவதும் தற்போது நிலவும் மழைக்கால சூழ்நிலையில், பரீட்சை நடவடிக்கைகளை தடையின்றி நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது. பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஒரு ஆயத்த நடவடிக்கையாக, பரீட்சைகள் திணைக்களமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து இம்மாதம் 5ஆம் திகதி குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளன.
பொதுவாக ஆகஸ்ட் மாதம் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகும் காலப்பகுதியாக இருந்தாலும், பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தற்போது தற்காலிகமாக மழைக்கால நிலைமை உருவாகியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். இருப்பினும், எதிர்வரும் 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளுக்குப் பிறகு மழைவீழ்ச்சியில் ஓரளவு குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பரீட்சை நடவடிக்கைகள் 10 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்படவுள்ளதால், அந்தக் காலப்பகுதியில் இந்த மோசமான வானிலையின் தாக்கம் பெருமளவு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்வரும் 6 ஆம் திகதிக்குப் பிறகு பசிபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாகும் சூறாவளி நிலைமையின் தாக்கத்தால் தீவில் மழைவீழ்ச்சியில் ஓரளவு அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் அஜித் விஜேமன்ன மேலும் விளக்கினார்.