மஹர சிறைச்சாலையில் நடந்தவை புதுப்பிப்புகள்

updates-on-what-happened-in-mahara-jail

மகர சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் ஒரு குழுவினரிடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையையும், பின்னர் ஏற்பட்ட அமைதியின்மையையும் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் ஒரு கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட மோதல்களில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஏழு கைதிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தீவு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




இந்த அமைதியின்மை சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதி குழுக்களுக்கிடையேயும், கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையேயும் ஏற்பட்ட தகராறின் காரணமாகவே ஏற்பட்டது. அங்கு சில கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி அதிகாரிகள் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மேலும் சிலர் சிறைச்சாலையின் பிரதான வாயிலையும் சுவரையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன், புதிதாக கட்டப்படவுள்ள அலுவலக வளாகத்தில் தகரத்தால் பிரிக்கப்பட்டிருந்த சுவர் பகுதியை தாக்கி உடைத்து தப்பிச்செல்லவும் சில கைதிகள் முயற்சித்துள்ளனர். இந்த கட்டுப்பாடற்ற நடத்தைகளின் போது, சிறைச்சாலையின் பிரதான ஜெயிலரின் அலுவலகம், ஒழுங்குப்பிரிவு, சமையலறை, புனர்வாழ்வு கட்டிடம் மற்றும் அலுவலகம் அத்துடன் சிறைச்சாலை வைத்தியசாலை உட்பட பல சொத்துக்களுக்கு கைதிகள் தீ வைத்து முழுமையாக அழித்துள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளன. சிறைச்சாலையின் ஒரு முனையில் கைதிகள் தப்பிச்செல்லும் ஆபத்து காரணமாக கடற்படையினர் வரவழைக்கப்பட்டனர், அங்கு இருந்த கைதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதால், பொலிஸார் சிறைச்சாலைக்கு வெளியே இருந்து மூன்று கண்ணீர்ப்புகை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்கிடையில், இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் விமானத்தைப் பயன்படுத்தி வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு போன்ற பல சத்தங்கள் கேட்டவுடன், வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த கைதிகளின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பொலிஸ் வீதித் தடைகளை உடைத்து நுழைய முயன்றபோது, பாதுகாப்புப் படையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர், அங்கும் சில குழுவினர் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியுள்ளனர்.




இந்த அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக பிரதேசத்தில் அமைதியை பாதுகாப்பதற்காக ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம சேவைப் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளது. அதன்படி, 246 கெந்தலியத்த பாளுவ - மேற்கு, 246 சி கெந்தலியத்த பாளுவ - வடக்கு மற்றும் 181 ஜி தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்த, அமைதியின்மை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் கட்டுப்பாடு இன்னும் நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். சிறைச்சாலையின் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுக்க பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், எந்தவொரு உயிர் இழப்பு அல்லது காயங்கள் ஏற்படுவதை குறைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்த அவர், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும், சிறைச்சாலையை பார்வையிட வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வூட்லர், கைதிகள் தற்போது தங்கள் அறைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டு சிறைச்சாலையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமைதியின்மைக்கான காரணம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும், ஏற்பட்ட சேதங்கள் மற்றும் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்படும் என்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

updates-on-what-happened-in-mahara-jail

updates-on-what-happened-in-mahara-jail

updates-on-what-happened-in-mahara-jail

updates-on-what-happened-in-mahara-jail

Post a Comment

Previous Post Next Post