கொழும்பு பொரளை மகசின் சிறைச்சாலையின் 'ஈ' (E) பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவினரிடையே இன்று இரவு 10.20 மணியளவில் திடீரென அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது. போதைப்பொருள் காரணமாக ஏற்பட்ட தகராறு முற்றியதால் இந்த கலவரமான நிலைமை ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பிரிவில் இருந்த 40 கைதிகள் திடீரென பிரிவிலிருந்து வெளியே வந்து கலவரமாக நடந்துகொண்டதையடுத்து இந்த சம்பவம் ஆரம்பமானது. நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க, பொலிஸார், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) உடனடியாக சிறைச்சாலை வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து செயற்பட்டதன் மூலம் நிலவிய அமைதியின்மை கட்டுப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது வளாகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முறையான விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.