
மெதிரிகிரிய பிரதேசத்தில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, பொலன்னறுவை கல்வி வலயத்தில் உள்ள ஒரு பின்தங்கிய பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டு தொடர்பில், அந்த பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் மற்றும் மற்றொரு ஆசிரியரைக் கைது செய்ய பொலன்னறுவை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இரண்டு ஆசிரியர்களும் குறித்த மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய பின்னர், இவ்வாறு அவருக்கு தொந்தரவு அளித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்த மாணவி சட்ட மருத்துவ பரிசோதனைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நிலவும் பாடசாலை விடுமுறை காரணமாக, குறித்த இரண்டு ஆசிரியர்களும் பிரதேசத்தை விட்டு வெளியேறி வேறு பிரதேசங்களுக்குச் சென்றுள்ளதால், இதுவரை அவர்களைக் கைது செய்ய முடியவில்லை. பொலன்னறுவை தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் பி. பி. கே. பத்திரணவின் வழிகாட்டலில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.