நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான அரசியலமைப்புத் திருத்தம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாட்டுக்காகத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பிய விடயங்களுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, ஆபத்தை எதிர்கொள்ளாமல் நாட்டில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்றும், அந்த மாற்றங்களால் தனது பதவி பறிபோனாலும், அதை ஏற்றுக்கொண்டு வெளியேறத் தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தன்னிடம் உள்ள நிறைவேற்று அதிகாரம் அல்லது வேறு எந்த அதிகாரத்தையும் அரசியலமைப்பிற்கு அப்பால் சென்று ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை என்று இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, தான் அதிகாரத்தில் இருப்பதன் நோக்கத்துடன் மட்டும் வந்தவர் அல்ல என்றும் கூறினார். அரசியலமைப்புத் திருத்தம் காரணமாக ஒரு முன்னாள் ஜனாதிபதி பதவி விலக நேர்ந்தது போலவே தனக்கும் பதவி விலக நேரிடலாம் என்ற கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்திய அவர், எதிர்காலத்தில் எந்தவொரு விளைவை எதிர்கொள்ள நேர்ந்தாலும், மக்களுக்காக ஆபத்தான முடிவுகளை எடுக்கத் தான் தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.
ஆபத்தான முடிவுகளை எடுப்பது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அதற்குச் சிறந்த உதாரணம் என்று சுட்டிக்காட்டினார். தனது பாதுகாப்பிற்குப் பொறுப்பான புலனாய்வுப் பிரிவினரால் சம்பந்தப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால், அதில் ஒருவித உயிர் ஆபத்து இருப்பதாகவும், அந்த ஆபத்து இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
கலந்துரையாடல் நடைபெறவிருந்த தினத்தின் காலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டமை தொடர்பாகவும் ஜனாதிபதி தனது அதிருப்தியை அங்கு வெளிப்படுத்தினார். சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிக்கைகளை வெளியிடுவதற்கு முழு உரிமை இருந்தாலும், ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போது, அதற்கு முன்னர் அதன் உள்ளடக்கத்தை வெளியிடுவது திறந்த கலந்துரையாடலுக்குத் தடையாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், தான் இந்தக் கூட்டத்திற்கு திறந்த மனதுடன் கலந்துரையாடும் நோக்கத்துடன் வந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
நீதிபதி வெற்றிடங்களை நிரப்பும் செயல்முறை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஒரு மாதத்திற்குள் அந்தப் பணிகளை முடிக்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு வழக்கில் 23,000 குற்றச்சாட்டுகளும் 3,000 சாட்சிகளும் அடங்குவதாகவும், அந்த வழக்கை விசாரிக்கும் மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள சிரேஷ்ட நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், எனவே அடுத்த கட்டமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம் பெறும் வாய்ப்பு அவர்களுக்கே கிடைக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.