
நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக அம்பகமுவ ஓயா பெருக்கெடுத்ததால், கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸையும் அதில் இருந்த பயணிகளையும் அப்பிரதேச இளைஞர்கள் குழுவொன்று காப்பாற்றியுள்ளது.
கடந்த 03ஆம் திகதி பிற்பகல் பிரதேசத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அம்பகமுவ ஓயா பெருக்கெடுத்து, கினிகத்தேனை மற்றும் நாவலப்பிட்டியை இணைக்கும் பிரதான வீதி முழுமையாக நீரில் மூழ்கியிருந்தது. அந்த நேரத்தில், கினிகத்தேனையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பயணிகளுடன் இந்த வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.
பஸ் விபத்துக்குள்ளானதைக் கண்ட அம்பகமுவ பிரதேச இளைஞர்கள் குழுவொன்று, கடுமையான உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் உடனடியாக செயல்பட்டுள்ளது. அவர்கள் ஒரு லொறியை பஸ்ஸுக்கு அருகில் ஓட்டிச் சென்று, அதில் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
பயணிகளை மீட்ட பின்னர், அந்த இளைஞர்கள் குழுவினர் ஒரு கார் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸையும் இழுத்து விபத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.