
தன்னைத் தேட வேண்டாம் என்றும், கட்டிலுக்கு அடியில் உள்ள கடிதத்தை எடுத்துக்கொள்ளுமாறும் தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்த பின்னர் காணாமல் போன பதினைந்து வயது பாடசாலை மாணவி மற்றும் அவரது காதலனைத் தேடும் பணியில் மாதம்பே பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர் மாதம்பே, தம்பகல்லவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பில் கல்வி கற்ற மாணவி ஆவார். அவர் தனது தந்தை பணிபுரியும் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று (18) காலை தனது தந்தைக்கு மதிய உணவு கொண்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரைத் தேடும் போது, சம்பந்தப்பட்ட இளைஞனின் கைபேசியிலிருந்து தாய்க்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது மாணவி, "நான் வரமாட்டேன்.. என்னை தேட வேண்டாம்.. கட்டிலுக்கு அடியில் ஒரு கடிதம் இருக்கிறது, எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். பின்னர் தாய் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது மகளுடன் உறவு வைத்திருந்த இந்த இளைஞன் இதற்கு முன்னர் மாதம்பே, இசம்மெடில்ல பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும், தற்போது வவுனியா பிரதேசத்தில் வேலை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக தாய் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சிறுமி அல்லது அவரது காதலன் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மாதம்பே பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.