பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான வர்த்தகர் மற்றும் நான்கு தனியார் வங்கி அதிகாரிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் அசங்க எஸ்.
போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்காக முன்வைக்கப்பட்ட பிணை மனுக்களை நிராகரித்தார்.நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான மொஹமட் ஜிஃப்ரி என்ற வர்த்தகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், பிரதான சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளதுடன், அது தொடர்பான மற்றொரு வழக்கின் காரணமாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சம்பாதித்த 6,050,000 ரூபாவை வங்கி கணக்கில் வைப்பு செய்தமை தொடர்பில் விஷ போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மொஹமட் ஜிஃப்ரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத வெளிநாட்டு நாணய மாற்று, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஆள்மாறாட்டம் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் தொடரும் என புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த வேறு அதிகாரிகள் உள்ளனரா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதால், விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்களிடம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலங்களை பதிவு செய்ய அனுமதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரினர், அதனுடன் தொடர்புடைய சாட்சியங்களின் சுருக்க அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், சந்தேகநபரான வர்த்தகர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.