ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான முன் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது, கடமைகளைத் தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைச்சாலையில் எந்த விசேட வசதிகளும் வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான அநுருத்த கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட இந்த முன்னாள் உயர் அதிகாரிகள் இருவரும் முதலில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட விசேட சிறைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு வழங்கப்படும் ‘ஜம்பர்’ சிறை உடை இவர்கள் இருவருக்கும் அணிவிக்கப்பட்டுள்ளதுடன், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சிறைச்சாலை வேலைக் குழுக்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்பதையும் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்.
சிறைச்சாலை வட்டாரங்களின்படி, இவர்கள் இருவருக்கும் வெளியிலிருந்து உணவு பெற அனுமதி இல்லை. தற்போதுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய வாரத்திற்கு ஒருமுறை குடும்ப உறுப்பினர்கள் இவர்களைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு சந்திக்கும் சந்தர்ப்பங்களில் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை வழங்க முடியாது. சோப்பு மற்றும் பற்பசை போன்ற சுகாதாரப் பொருட்களை மட்டுமே குடும்ப உறுப்பினர்களால் வழங்க முடியும். மேலும், இந்த சந்திப்புகளுக்காக குடும்ப உறுப்பினர் ஒருவர் சிறைச்சாலை விதிகளின்படி முன் பதிவு செய்திருப்பது கட்டாயமாகும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற விசேட தேசிய மற்றும் மத பண்டிகைக் காலங்களில் மாத்திரம் சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியுடன், பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான பரிசோதனைகளுக்கு உட்பட்டு வெளியிலிருந்து இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுகளைக் கொண்டுவர வாய்ப்பு வழங்கப்படும்.
இதற்கிடையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்காக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவருக்காக ஆஜராகும் சட்டத்தரணி ரொஷான் தெஹிவல தெரிவித்தார். நேற்று முன்தினம் (01) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் பொலிஸ் மா அதிபரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 28 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மேன்முறையீட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். அங்கு முன்னாள் பொலிஸ் மா அதிபரின் உடல்நிலை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சட்டத்தரணி, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறினார்.