நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, நாட்டின் விவசாயத் துறையை மேலும் புதுப்பித்து, நவீனமயமாக்கப்பட்ட நிலைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதற்காக விவசாய அமைச்சு மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு மிக நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப (BMICH) வளாகத்தில் நடைபெற்ற இலங்கையின் மிகப்பெரிய உணவுத் தொழில் கண்காட்சியான 'புரோ ஃபுட் - புரோ பேக் - அக் பிஸ் மற்றும் நோலேஜ் ஹப் 2026' கண்காட்சியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர ஆகியோரின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இக்கண்காட்சி நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலங்கை உணவுப் பொதியிடுபவர்கள் சங்கம், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சகத்துடன் இணைந்து 23வது முறையாக ஏற்பாடு செய்த இக்கண்காட்சியில் 450 கண்காட்சி கூடங்கள் இடம்பெற்றன. சீனா, இந்தியா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு கண்காட்சியாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
வணிகத்திலிருந்து நுகர்வோருக்கு (B2C) மற்றும் வணிகத்திலிருந்து வணிகத்திற்கு (B2B) தொடர்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இக்கண்காட்சி, பொதியிடல் நிபுணர்கள், ஏற்றுமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், உணவு பதப்படுத்துபவர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரை ஒரே வளாகத்தில் ஒன்றிணைக்கும் ஒரு முன்னணி தளமாகும். இதன் மூலம் வலையமைப்பு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் வணிக வளர்ச்சிக்கு பல மதிப்புமிக்க வாய்ப்புகள் உருவாகும் என்று அமைச்சர் ஹந்துன்னெத்தி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர உணவு பதப்படுத்துபவர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'SME Pavilion' மூலம், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (SMEs) தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தவும், புதிய சந்தை வாய்ப்புகளைப் பெறவும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.