நுவரெலியா, பொரலந்த வினாயகபுரம் பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி அவரைக் கொலை செய்த கணவன் பொலிஸில் சரணடைந்துள்ளார். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சித்ரா தேவி என்ற பெண்ணாவார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே தான் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி இந்த காயங்களை ஏற்படுத்தியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை பிரதேசவாசிகள் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபரான கணவன் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.