
2006 ஆம் ஆண்டில் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாத போதிலும் யோஷித ராஜபக்ஷ அவர்களை இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரி மாணவராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தமை மற்றும் தற்போதுள்ள பாரம்பரிய நடைமுறைக்கு அப்பால் அரசாங்கத்தின் நிதியைச் செலவழித்து பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியில் ஒரு பாடத்திட்டத்திற்காக அவரை அனுப்பியதன் மூலம் ஊழல் எனும் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மகன் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆகஸ்ட் 20 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் குறித்த வழக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகைகள் திறந்த நீதிமன்றத்தில் பிரதிவாதிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் இருவரையும் தலா 10 மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதி, அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நடவடிக்கையின் போது முறைப்பாட்டின் ஒப்புதல்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை இலஞ்ச ஆணைக்குழுவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்திய மேல் நீதிமன்ற நீதிபதி, முன் விசாரணை மாநாட்டிற்காக இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி மீண்டும் அழைக்க திகதி நிர்ணயித்தார்.