சுஜீஸ்வர விசேட திட்டங்கள் என்று கூறி, அரசாங்கப் பணத்தில் அரசியல் கூட்டங்களை நடத்தி

political-meetings-were-held-with-the-money-of-the-government-under-the-name-of-sugeeshwara-special-projects

விசேட திட்டங்களை மேற்கொள்வதாகக் கூறி, ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் பெறப்பட்ட அரச நிதியைப் பயன்படுத்தி, எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் அரசியல் கூட்டங்களை நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட திட்டப் பணிப்பாளராகவும் செயற்பட்ட சுகீஸ்வர பண்டார என்ற சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌஷல்ய முன்னிலையில் இதனைத் தெரிவித்தனர்.




முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

2022 ஜூலை 14ஆம் திகதி முதல் 2024 டிசம்பர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்று நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, சம்பவம் தொடர்பான விசாரணைகளின் மேலதிக முன்னேற்ற அறிக்கை ஒன்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்டது.




குறித்த நிதியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அரசியல் கூட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், விசேட திட்டப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படும் நபர்களிடமிருந்து எதிர்காலத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post