
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் நான்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தென் மாகாணத்திற்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டப்ள்யூ.கே. ஜயலத் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசேட பாதுகாப்புப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் யூ.பி.ஏ.டி.கே.பி. கருணாநாயக்க வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வட மாகாணத்திற்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.எம்.எச்.பி. சிறிவர்தன தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது மகளிர் விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு அப்பதவியுடன் பயிற்சி மற்றும் உயர் பயிற்சி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியின் பதில் கடமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக மேன்முறையீட்டுத் தீர்ப்பாயத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த தீர்ப்பு கடந்த மே மாதம் 13 ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த உத்தரவிற்கமைய ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் கிடைக்க வேண்டிய அனைத்து நிலுவைச் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் மீண்டும் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷானி அபேசேகர பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் 3/2018 சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கு இணங்க 2024 ஆம் ஆண்டில் மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்ட அவர், பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.