ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து வாகன அபராதக் கட்டணங்களும் 'govPay' முறைமை ஊடாக மாத்திரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரச துறையின் டிஜிட்டல் மாற்றும் செயல்முறையை மேலும் வேகமாகவும் வலுவாகவும் ஆக்குவதற்காக, தகவல் தொழில்நுட்ப சேவையை நாடு தழுவிய அரச சேவையாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலர் மட்டத்திற்கு உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் தற்போது ஆரம்பித்துள்ள பல்வேறு திட்டங்களின் வெற்றி குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.