கொழும்பு பாஸ்டியன் வீதி தனியார் பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டிகளின் வீதித் தகுதி மற்றும் புகைப் பரிசோதனைக்காக விசேட இரவு நேர நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் வாகனப் புகைப் பரிசோதனை நிகழ்ச்சித்திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திடீர் பரிசோதனையின் போது 59 பஸ் வண்டிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவற்றில் 39 பஸ் வண்டிகளுக்கு பராமரிப்பு உத்தரவுகள் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பகல் வேளையில் சேவையில் ஈடுபடாமல் இவ்வாறான பரிசோதனைகளில் இருந்து தப்பிக்கும் பஸ் வண்டிகளை இலக்கு வைத்து இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கப்பட்ட சில பஸ் வண்டிகளும் வாகனப் புகைப் பரிசோதனை நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய, அந்த பஸ் வண்டிகளின் வீதி அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக இரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு இணையாக, கிளிநொச்சி பிரதேசத்தில் இயங்கும் பஸ் வண்டிகளின் வீதித் தகுதியை பரிசோதிக்கும் மற்றுமொரு விசேட நிகழ்ச்சித்திட்டமும் கடந்த 22ஆம் திகதி பகல் வேளையில் வாகனப் புகைப் பரிசோதனை நிகழ்ச்சித்திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இயக்கத்திற்கு பொருத்தமற்ற நிலையில் உள்ள பஸ் வண்டிகளை அடையாளம் காணும் இவ்வாறான விசேட பரிசோதனைகளை வாராந்தம் தொடர்ச்சியாக நடத்த வாகனப் புகைப் பரிசோதனை நிகழ்ச்சித்திட்டம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து இந்த பரிசோதனை நிகழ்ச்சித்திட்டத்தை நாடு முழுவதும் வாராந்தம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.