மீகஹகிவுல புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஒரு சில்லறை வர்த்தக நிலையத்திலிருந்து எட்டு இலட்சம் ரூபாய் பணத்தைக் கொண்ட பையைத் திருடிய ஒருவர், மறுநாள் மீண்டும் அதே கடைக்கு வந்தபோது உரிமையாளரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. வெற்றிலை பாக்கு வாங்கும் சாக்கில் வந்து இந்த திருட்டைச் செய்துள்ளார். சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கடந்த 07 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பண இழப்புக்கு உள்ளானவர் மீகஹகிவுல, கொலோன்வத்த, கெசெல்வத்த முகவரியில் வசிக்கும் 74 வயதுடைய ஒரு வர்த்தகர் ஆவார். அவர் குறித்த பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள வாடகை கட்டிடத்தில் ஒரு சில்லறை வர்த்தக நிலையத்தை நடத்தி வருகிறார். தினமும் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை ஒரு துணிப்பையில் போட்டு மாலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்வதும், மறுநாள் காலை மீண்டும் கடைக்கு கொண்டு வருவதும் வழக்கம்.
சம்பவம் நடந்த அன்று காலை எட்டு இலட்சம் ரூபாய் பணத்துடன் கூடிய பையை கடைக்கு கொண்டு வந்து பிஸ்கட் அடுக்கப்பட்டிருந்த மேசையின் மீது வைத்து அவர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அன்று பகல் 1.30 மணியளவில் கருப்பு நிற நீண்ட காற்சட்டையும் நீல நிற சட்டையும் அணிந்திருந்த, நரைத்த முடியுடன் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வெற்றிலை பாக்கு கேட்டு வந்துள்ளார். வெற்றிலை பாக்கு கொடுத்த பிறகு அவர் புகையிலையையும் கேட்டதால், மேசையின் மீது இருந்த ஷாப்பிங் பையிலிருந்து புகையிலையை எடுத்துக்கொள்ளுமாறு கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
மாலை 4.00 மணியளவில் கடையை மூட தயாராகிக் கொண்டிருந்தபோது, மேசையின் மீது இருந்த பணப்பை காணாமல் போயிருந்ததை உரிமையாளர் அவதானித்துள்ளார். அதன்படி வெற்றிலை பாக்கு வாங்க வந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மறுநாள் அதாவது 07 ஆம் திகதி மாலை அந்த நபர் மீண்டும் கடைக்கு வந்தபோது, வர்த்தகர் அவரை கடைக்குள் தடுத்து வைத்து பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஊவவத்த, தீகல்ல முகவரியில் வசிக்கும் 52 வயதுடைய ஒருவர் ஆவார். பதுளை மாவட்ட பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்ஷிரி விஜேசேன, பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண மற்றும் பதுளை மாவட்ட (1) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வேஹித தேசப்பிரிய ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், கந்தகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எம்.எச்.டி. ஜயதுங்கவின் வழிகாட்டலின் கீழ் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.