தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, முன்னர் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச அதிகாரிகள் இந்த சந்தேகநபரை நேற்று (21) மாலை 4.55 மணியளவில் மேற்கொண்ட விசேட விசாரணையின் போது கைது செய்துள்ளனர்.
இலங்கை பொஸ்பேட் நிறுவனம் ஊடாக உரிய நடைமுறையிலிருந்து விலகி, தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட்டை ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்தமை மற்றும் அதற்கான ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள உதவியமைக்காக 81 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டமை இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிகாரி தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.