பொரலெஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (04) இரவு புகுந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்டவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுனில் பெர்னாண்டோ என்பவராவார்.
சம்பவம் தொடர்பில் பொரலெஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், 'தெஹிவளை சான்டோ' எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரால் 'கொஸ்மல்லி' என்பவரின் காசாளரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், துப்பாக்கிதாரிகளின் இலக்கு தவறியதால் அந்தக் காசாளரின் தந்தைக்கு துப்பாக்கிச் சூடு பட்டு இந்த கொலை நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளனர். குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பொரலெஸ்கமுவ பொலிஸார் விசேட நடவடிக்கைகளையும் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.