இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில், தமது வீட்டுப் பாவனைக்கான திரவ பெற்றோலிய எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய விலை திருத்தம் குறித்து அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விலை மாற்றங்களுக்கு அமைய, அதிக கேள்வி நிலவும் 12.5 கிலோ வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னர் காணப்பட்ட விலைகள் குறைவடைந்து, அந்த அளவிலான எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
இது தவிர, 5 கிலோ அளவிலான எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய கட்டணம் 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. அத்துடன், 2.3 கிலோ சிறிய எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கமைய, இன்று முதல் அதன் புதிய விற்பனை விலை 815 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.