காலி, உனவட்டுன ரூமஸ்ஸல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையான பொனவிஸ்டா கல்லூரியின் அதிபர், இரண்டு பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்காக இரண்டரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ரஞ்சித் பொன்சேகா என்ற அதிபராவார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், காலி நீதவான் சமீர தொடங்கொடவினால் நேற்று (08) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட குழந்தைகளின் தாயால் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி, 2026 ஆம் ஆண்டில் இந்த இரண்டு குழந்தைகளையும் முதல் தரத்திற்கும் எட்டாம் தரத்திற்கும் சேர்ப்பதற்காக சந்தேகநபரான அதிபர் முதலில் 06 இலட்சம் ரூபா பணத்தைக் கேட்டுள்ளார். பின்னர் அந்த இலஞ்சப் பணம் 03 இலட்சம் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் முதலில் பெறப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பணத்தைப் பெற்ற பின்னரும் சந்தேகநபர் மேலதிக பணத்தைக் கேட்டுள்ளதுடன், மீதிப் பணத்தைக் கொடுக்காவிட்டால் குழந்தைகளை பாடசாலையிலிருந்து நீக்கிவிடுவேன் என அச்சுறுத்தியுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் தாய் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
கிடைத்த முறைப்பாட்டின் பேரில் செயற்பட்ட இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று முன்தினம் (07) மாலை காலி, ஹபராதுவ கட்டுக்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இரண்டரை இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபரான அதிபரைக் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிபர் காலி துறைமுகப் பொலிஸில் தடுத்து வைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் நேற்று (08) மாலை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.