
வீதியில் நடந்து சென்ற பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை கொள்ளையடித்த இருவர் உட்பட நால்வரை, சுமார் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளுடன் கடந்த 31ஆம் திகதி ஹொரணை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேகநபர்களுடன், குறித்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் இரு பெண்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அங்ருவாதொட்ட, நார்த்துபான மற்றும் ஹொரணை, பெல்லபிட்டிய, ஏக்கர் 35 பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர். இவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்ற இரு பெண்களும் 50 மற்றும் 55 வயதுடைய சந்தேகநபர்களின் தாயும் அத்தையுமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது, அவர்களில் ஒருவர் திருடிய தங்கச் சங்கிலி ஒன்றை விழுங்கியுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகையை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 25ஆம் திகதி முதல் ஒரு வார காலமாக ஹொரணை, வெலிகல, படுவிட்ட, திக்ஹேன மற்றும் உடவத்த வீதி ஆகிய பிரதேசங்களில் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கர்ப்பிணித் தாய் ஒருவரின் தங்கச் சங்கிலியையும் இவர்கள் பறித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தி பிரதேசமெங்கும் சுற்றித் திரிந்து மக்களை அச்சுறுத்திய இந்தக் கும்பல், மொரகஹஹேன பிரதேசத்தில் மேற்கொண்ட இரண்டு கொள்ளை முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. திருடப்பட்ட தங்கப் பொருட்களைத் தங்கள் தாய்மார்கள் மூலம் அடகு வைத்துப் பெற்ற பணத்தில் வாங்கப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும், குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் சார்ஜன்ட் (14934) ஜனகவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹொரணை தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் சமன் ரோஹணவின் வழிகாட்டலில், பொலிஸ் பரிசோதகர் ரங்க திசாநாயக்க, உதவிப் பொலிஸ் பரிசோதகர் குருசிங்க, பொலிஸ் சார்ஜன்ட்கள் ஜனக (14934), மெண்டிஸ் (70153) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சமன் (78834) மற்றும் லஹிரு (13022) ஆகிய அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.