பாரிஸ் நகரில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து சிறுவர் பிக்பாக்கெட் கும்பல்களை இயக்கிய ஒரு குடும்பத்தின் தலைவருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 48 வயதான ரொபர்டோ ஹமிடோவிக் என்ற இந்த நபர் மனித கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் இவ்வாறு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாரிஸில் உள்ள மெட்ரோ ரயில் சேவை மற்றும் டிஸ்னிலேண்ட் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் உலவும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பணத்தைத் திருடுவதற்கு, 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் உட்பட குழந்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சிறுவர் திருடர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 25,000 யூரோக்களை சம்பாதித்துள்ளனர்.குறிப்பிட்ட குழந்தைகள் தேவையான பணத்தைக் கொண்டுவரத் தவறியபோது, அவர்கள் தாக்கப்பட்டனர், எரிக்கப்பட்டனர் அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர் என்பது பாரிஸ் நீதிமன்றத்தில் தெரியவந்தது. இந்த கும்பலின் தலைவரான ஹமிடோவிக் உட்பட பெரியவர்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தனர், அதேசமயம் திருட்டில் ஈடுபட்ட சிறுமிகள் குறைந்த வசதிகள் கொண்ட விடுதிகளிலோ அல்லது கைவிடப்பட்ட கட்டிடங்களிலோ வாழ வேண்டியிருந்தது. ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளில் பரவியுள்ள சர்வதேச பிக்பாக்கெட் கும்பல் வலையமைப்பின் ஒரு பகுதியாக செயல்பட்ட இந்த கும்பலின் ஏழு உறுப்பினர்கள் மனித கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட திருட்டு, சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். எனினும், அவர்கள் அனைவரும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். நீதிமன்றம் ரொபர்டோ ஹமிடோவிக்குக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 500,000 யூரோ அபராதமும் விதித்தது, மேலும் அவரது மனைவி லேஜ்லாவுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 300,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. கூடுதலாக, அவரது இரண்டு மகன்கள், ஒரு மருமகன் மற்றும் இரண்டு உறவுப் பெண்களுக்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு பிரான்சில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும், மீண்டும் பிரான்சுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் மெட்ரோ ரயில் பாதையில் நடக்கும் திருட்டுகளில் 75% இந்த கும்பல் பொறுப்பு என்று நம்பப்படுகிறது, மேலும் ஒரு நாளைக்கு ஆறு முதல் ஒன்பது குழந்தைகள் டிஸ்னிலேண்ட், சார்லஸ் டி கோல் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மாதத்திற்கு 2,000 முதல் 5,000 யூரோக்கள் வரை வருமானம் ஈட்டும் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர் என்று ரொபர்டோ நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அரசு வழக்கறிஞர் அலிஸ் குய்லட், தண்டனைகளில் இருந்து தப்பிக்க இந்த குடும்பம் வேண்டுமென்றே சிறுவர்களைப் பயன்படுத்தியதாகக் கூறினார். பிரெஞ்சு சட்டத்தின்படி குற்றவியல் தண்டனை விதிக்க முடியாத வயது என்பதால், காவல்துறையிடம் பிடிபட்டால் தங்களுக்கு 12 வயது என்று சொல்லும்படி இந்த சிறுவர் பிக்பாக்கெட் திருடர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் ரொபர்டோவின் மாமாவான ஃபெஹ்மி ஹமிடோவிக் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பிறகு, ரொபர்டோ இந்த வலையமைப்பின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹமிடோவிக் தம்பதியினர் இதன் மூலம் சுமார் 2 மில்லியன் யூரோக்கள் செல்வத்தை குவித்துள்ளதாகவும், அது வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சந்தேகிக்கப்படுகிறது.