
பௌத்தசாசன அமைச்சின் புத்தகங்களை அச்சிடும்போது முறையான அரச கொள்முதல் நடைமுறையிலிருந்து விலகிச் செயற்பட்டு, நாற்பத்தேழு இலட்சத்து தொண்ணூறாயிரம் ரூபா (ரூ. 4,790,000) பணத்தை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் கமல் பண்டார திசாநாயக்க இன்று (25) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட விசாரணைகளில், சந்தேகத்திற்குரிய முன்னாள் செயலாளர் தனக்கு நெருக்கமான ஒரு தனியார் நிறுவனத்திற்கு மூன்று சந்தர்ப்பங்களில் இந்த புத்தக அச்சிடும் பணிகளை வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அவ்வாறு அச்சிடப்பட்ட புத்தகக் கையிருப்பை அமைச்சின் உத்தியோகபூர்வ களஞ்சியசாலைக்கு பொறுப்பேற்காமல், அதற்கான முழுப் பணத்தையும் இவர் செலுத்தியுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட நெருக்கமான நிறுவனத்திற்கு அநியாயமான முறையில் ஆதாயம் தேடிக்கொடுத்ததன் மூலம் ஊழல் எனும் குற்றத்தைச் செய்ததாக முன்னாள் செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.