முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகவிருந்த நிலையில், இன்று (16) அதிகாலை சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று அதிகாலை 01.10 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான SQ-469 விமானத்தில் அவர் இவ்வாறு தீவை விட்டு வெளியேறியுள்ளார். அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியார் ஆன் டி லிவேரா அம்மையாரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளார்.
அவசர சத்திரசிகிச்சைக்காகவே அவர் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (15) ஏற்பட்ட திடீர் சுகவீனத்தினால் அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவசர இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு சில வாரங்கள் முழுமையான படுக்கை ஓய்வு தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். அந்த சுகவீன நிலை காரணமாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கைகள் பின்னர் ஒத்திவைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கிய 'சிரிலிய சவிய' அமைப்பின் நிதிக் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், அவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு முன்னிலையிலும் அழைக்கப்படவிருந்த பின்னணியிலேயே இந்த வெளிநாட்டுப் பயணம் இடம்பெற்றுள்ளது.
இந்த விசாரணைகளின்படி, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் இயந்திரம் வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி, சிரிலிய சவிய நிதிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறித்த ஸ்கேனர் இயந்திரம் சீன அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், வங்கியிலிருந்து பெறப்பட்ட பணம் அமைப்பின் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் மருதானை மற்றும் சுதுவெல்ல கிளைகளில் பராமரிக்கப்பட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டு வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை வங்கி அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் பராமரிக்கப்பட்ட இந்தக் கணக்கின் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த 10 மில்லியன் ரூபாய் பணத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் தலைமையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னரும் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.