இன்று (7) இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டில் இருந்து திரும்பியபோது விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக வழக்கறிஞர்கள் மூலம் பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார். தனது எதிர்பார்க்கப்பட்ட பிணை மனுவை ஆதரிக்கும் காரணங்களாக தனது உடல்நிலை குறித்த பல மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அவர் சமர்ப்பித்த சத்தியக் கடதாசியில், பல ஆண்டுகளாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இதயப் பரிசோதனைகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் பெறப்பட்ட சிகிச்சைகள் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியுள்ளன.
அவரது சத்தியக் கடதாசியின்படி, அவரது இதய நோய்க்கான முதல் அறிக்கை 2019 ஆம் ஆண்டுக்குரியது. 2019 செப்டம்பர் 7 ஆம் தேதி நவலோக மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட CT Coronary Angiogram பரிசோதனையில், இதயத்திற்கு இரத்தம் வழங்கும் மூன்று முக்கிய கரோனரி தமனிகளிலும் பிளேக் படிவுகள் மற்றும் சிறிய சுருக்கங்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலை மருத்துவ அறிக்கைகளில் "Triple Vessel Disease" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஆகியவையும் தான் எதிர்கொள்ளும் நோய்களில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி குமட்டல், அதிக சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் உடல் அசௌகரியம் காரணமாக தான் மீண்டும் நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு பேராசிரியர் அர்ஜுன டி சில்வா அவர்களின் கீழ் சிகிச்சை பெற்றதாகவும் ஷிரந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல் Vertigo நிலை என அடையாளம் காணப்பட்டதுடன், உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோயும் இருப்பதாகவும் மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்காக Aspirin, Crestor மற்றும் Nebivolol உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் சத்தியக் கடதாசியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக இதயப் பரிசோதனைகளில், செப்டம்பர் 21 ஆம் தேதி அவரது Total Coronary Calcium Score மதிப்பு 1022 ஆகப் பதிவாகியுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதயத் தமனிகளில் கால்சியம் படிவுகளின் அளவை அளவிடும் இந்த மதிப்பு 400 ஐத் தாண்டுவது கூட மருத்துவ ரீதியாக அதிக ஆபத்தான நிலையாகக் கருதப்படுகிறது. மேலும், கழுத்தில் உள்ள கரோடிட் தமனிப் பகுதியிலும் கால்சியம் கொண்ட பிளேக் படிவு இருப்பதாகவும் அந்தப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, இருதய நோய் நிபுணர் டாக்டர் தினேஷ் நாயர் அவருக்கு மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளார். மார்பு வலி ஏற்பட்டால் உடனடியாகப் பயன்படுத்துவதற்காக Nitromint Spray-யும் வழங்கப்பட்டுள்ளதாக சத்தியக் கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கு தொடர்ந்து சிறப்பு மருத்துவ கண்காணிப்பும் சிகிச்சையும் தேவை என்றும், அத்தகைய சிகிச்சைகள் கிடைக்கப்பெறாவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் ஷிரந்தி ராஜபக்ஷ தனது சத்தியக் கடதாசி மூலம் நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார். அதேவேளை, சுமார் பத்து ஆண்டுகளாக இந்த விசாரணைக்கு தான் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், நீதிமன்றத்தால் விதிக்கப்படும் எந்தவொரு நிபந்தனைக்கும் கட்டுப்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தனது எதிர்பார்க்கப்பட்ட பிணை மனுவில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வளவு ஆபத்தான நிலையில் அவர் சிங்கப்பூரில் தனியாக ஷாப்பிங் சென்றதை அரசியல் ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தனர். இன்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை கிடைக்க வாய்ப்புள்ளதுடன், வழக்கு நடவடிக்கைகள் தொடரும். சிங்கப்பூர் ஷாப்பிங் காட்சிகள் இதனுடன் வெளியிடப்படுகின்றன.


