மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பாரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
4 ஹெலிகொப்டர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவல்களின்படி, முன்னெடுக்கப்பட்ட வான்வழி மீட்பு நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 121 பேரின் உயிர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் நிவாரணக் குழுக்கள் வெற்றி பெற்றுள்ளன.
கிண்ணியா நகரம் தற்போது முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக சிலர் மரங்களின் மீது ஏறி தங்கியிருப்பதாகவும், அவர்களை விரைவாக மீட்பதற்காக கடற்படை விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூதூர் மற்றும் நீலப்பொல பிரதேசங்களில் வசித்த மக்களை நேற்று (29) இரவு பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாகவும், இந்த அனர்த்த நிலைமை குறித்த கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சோமபுர, சிறிமங்கலபுர, கல்யார் மற்றும் தெஹிவத்த பிரதேச மக்கள் வான்வழியாக சேருவில நவொதயா பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் மேலதிக பாதுகாப்புக்காக சேருவில ராஜமகா விகாரையில் தற்காலிகமாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தங்கவேலி கிராமத்தில் சுமார் ஆயிரம் பேர் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களை மிக விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் மகா சங்கத்தினர் தொலைபேசி மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
Tags:
News