தீவின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையின் தாக்கம் தற்போது கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் கடுமையாக உணரப்பட்டுள்ளதுடன், பலத்த மழை காரணமாக வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த இடையூறுகள் காரணமாக வாகனப் போக்குவரத்துக்கு தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதால், முடிந்தவரை மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக, பிரேமசிறி கேமதாச மாவத்தையில் உள்ள லயனல் திரையரங்கிற்கு அருகிலும், தேசிய வைத்தியசாலையின் 4 ஆம் இலக்க வாயிலுக்கு அருகிலுள்ள கெப்பற்றிப்பொல மாவத்தையிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்துடன், அல்விட்டிகல மாவத்தையில் உள்ள ராணி வீதி சந்தி மற்றும் கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி சந்திக்கு அருகிலுள்ள கோவில் பகுதியிலும் வீதித் தடங்கல்கள் இருப்பதால், அந்த வீதிகளைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு மழையால் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
கடுவெல வெளியேறும் இடம் நீரில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடுவத்தையிலிருந்து வரும் வாகனங்கள் இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளதால், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மேலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலணிகம மற்றும் கஹதுடுவ பகுதிகளுக்கு இடையிலான பத்தேகொட பிரதேசத்திற்குட்பட்ட 12.5 கிலோமீட்டர் தூரக் கம்பத்திற்கு அருகில் உள்ள பக்கச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்தச் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மண்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு இடதுபக்கப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் மேலும் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், குறித்த பகுதி தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளதுடன், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் இந்த பகுதியையும், அதிவேக நெடுஞ்சாலையின் ஏனைய பக்கச்சுவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
News