அமெரிக்க மற்றும் ஈக்வடார் ஆயுதப் படைகள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான முக்கியமான கூட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க தெற்கு கட்டளைத் தலைமையகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. தென் மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியம் முழுவதும் பரவியுள்ள 31 நாடுகளை உள்ளடக்கிய இந்த கட்டளைத் தலைமையகம் 'X' சமூக ஊடகங்கள் மூலம் இதை அறிவித்தாலும், இந்த நடவடிக்கை குறித்த மேலதிக தகவல்களை வெளியிடுவதில் இரு தரப்பினரும் தவிர்த்தனர்.
ஈக்வடார் பாதுகாப்பு அமைச்சகம், இந்த தாக்குதல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது.போதைப்பொருட்களுக்கு எதிரான போரின் புதிய கட்டத்தில் வாஷிங்டன் இணைந்துள்ளதாக ஈக்வடார் அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் ஈக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோவா (Daniel Noboa), துறைமுகங்களைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைக்கு கொக்கெய்ன் கடத்தும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பிராந்திய நட்பு நாடுகளுடன் அமெரிக்காவும் இணைந்துள்ளது என்பதை வலியுறுத்தினார். இது தொடர்பாக விவாதிக்க, ஜனாதிபதி கடந்த திங்கட்கிழமை தலைநகர் குயிட்டோவில் (Quito) அமெரிக்க தெற்கு கட்டளைத் தளபதி பிரான்சிஸ் டொனோவன் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் தளபதி மார்க் ஷேஃபர் ஆகியோரை சந்தித்தார். விமான மற்றும் கடல் துறைமுகங்களில் தகவல் பரிமாற்றம் மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முக்கிய கொக்கெய்ன் உற்பத்தி நாடுகளான கொலம்பியா மற்றும் பெருவில் உற்பத்தி செய்யப்படும் போதைப்பொருட்களில் சுமார் எழுபது சதவீதம் அண்டை நாடான ஈக்வடார் வழியாக மற்ற நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் காரணமாக ஏற்பட்ட கடுமையான கும்பல் மோதல்களால், லத்தீன் அமெரிக்காவின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக இருந்த ஈக்வடார் சில ஆண்டுகளில் பிராந்தியத்தின் மிகவும் ஆபத்தான நாடாக மாறியுள்ளது.
2023 இல் வலதுசாரித் தலைவரான நோபோவா ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்காவிற்கும் ஈக்வடாருக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. மூடப்பட்ட அமெரிக்க இராணுவ தளத்தை மீண்டும் திறக்க ஜனாதிபதி கடந்த ஆண்டு முயன்றாலும், வெளிநாட்டு தளங்களை தடை செய்யும் சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக நவம்பரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் அந்நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், மான்டா (Manta) துறைமுக நகரத்தில் அமைந்துள்ள பழைய அமெரிக்க இராணுவ தளத்திற்கு தற்காலிகமாக விமானப்படை அதிகாரிகள் குழுவை நியமிப்பதாக அமெரிக்கா கடந்த டிசம்பரில் அறிவித்தது.