ராவல்பிண்டியில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் வலுவான தொடக்கத்தைப் பெற்றிருந்த இலங்கை அணி, திடீரென 30 ஓட்டங்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவைச் சந்தித்தது பாகிஸ்தானின் வெற்றியை இலகுவாக்கியது.
மொஹம்மத் நவாஸ் மற்றும் ஷாஹீன் அப்ரிடியின் பந்துவீச்சுத் திறமையால், 115 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை பாகிஸ்தான் அணி 8 பந்துகள் மீதமிருக்க எட்டியது.வறண்ட தன்மை கொண்ட ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றதுடன், பவர்பிளே (Powerplay) ஓவர்களில் 56 ஓட்டங்களைப் பெற்றது. ஷாஹீன் அப்ரிடி வீசிய மெதுவான பந்தில் மூன்றாவது ஓவரிலேயே பதும் நிஸ்ஸங்க ஆட்டமிழந்தாலும், கமில் மிஷார எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடியதால் இலங்கைக்கு நல்ல அடித்தளம் கிடைத்தது. குறிப்பாக, சல்மான் மிர்சா வீசிய பவர்பிளே ஓவரின் கடைசி ஓவரில் மிஷார 17 ஓட்டங்களை எடுத்ததுடன், குசல் மெண்டிஸ் விக்கெட்டைப் பாதுகாத்து அவருக்கு ஆதரவளித்தார்.
37 பந்துகளில் தனது இரண்டாவது அரைச்சதத்தைப் பதிவுசெய்த மிஷார, 11வது ஓவரில் ஓட்டப் பலகையை ஒரு விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்கள் வரை உயர்த்தினார். ஆனால், மொஹம்மத் நவாஸ் குசல் மெண்டிஸை ஆட்டமிழக்கச் செய்தவுடன் போட்டியின் போக்கு முற்றிலும் மாறியது.
அங்கிருந்து ஆரம்பித்த இலங்கை அணியின் சரிவு மிகவும் மோசமாக இருந்தது. சாய்ம் அய்யூப் மிஷாராவை ஆட்டமிழக்கச் செய்ய, அப்ரார் அஹ்மத் குசல் பெரேரா மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோரை 3 பந்துகளுக்குள் வெளியேற்றினார். பின்னர், நவாஸ், ஜனித் லியனகே மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் மத்திய வரிசையை அழித்தார்.
ஷாஹீன் அப்ரிடி வீசிய மெதுவான பந்துகளில் தசுன் ஷானக மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆட்டமிழந்தனர். 20வது ஓவரில் துஷ்மந்த சமீராவை ஆட்டமிழக்கச் செய்த சல்மான் மிர்சா, இலங்கை அணியின் இன்னிங்ஸை 114 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினார். 10 ஓவர்களில் 81 ஓட்டங்கள் எடுத்திருந்த இலங்கை அணி, அடுத்த 9.1 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிடி மற்றும் மொஹம்மத் நவாஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
115 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்காக சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் சாய்ம் அய்யூப் முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவர்களில் 46 ஓட்டங்கள் சேர்த்தனர். இஷான் மாலிங்க பர்ஹானை ஆட்டமிழக்கச் செய்தாலும், பாபர் அசாம் மற்றும் அய்யூப் இரண்டாவது விக்கெட்டுக்கு மேலும் 29 ஓட்டங்களை வேகமாகச் சேர்த்தனர். பந்து தாழ்வாகச் சென்றதால், வனிந்து ஹசரங்க பந்துவீச்சில் அய்யூப் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.
ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு அவ்வளவு இலகுவாக இல்லாவிட்டாலும், ஓட்டப் பலகையில் போதுமான ஓட்டங்கள் இல்லாதது இலங்கைக்கு பாதகமாக அமைந்தது. பாபர் அசாம் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி சல்மான் அகாவுடன் 23 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில், பக்கர் சமானுடன் இணைந்து பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு முத்தரப்புத் தொடர் வெற்றியைத் தனது பெயரில் பதிவு செய்தது.

Tags:
Cricket