ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாமியர் பிரித்தானியாவில் புகலிடம் கோரியது பெரும் சர்ச்சை!

muslim-linked-to-easter-attacks-sparks-controversy-as-uk-asylum-visa-application

 இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பிரித்தானியாவில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக பிரித்தானிய டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
இவர் ஒரு இஸ்லாமியர் என்று கூறப்பட்டாலும், அவரது அடையாளம் பத்திரிகையால் வெளியிடப்படவில்லை.


269 பேரின் உயிரைப் பறித்த அந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட இந்த இலங்கை சந்தேகநபர், பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால் முதலில் நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையை மீண்டும் பரிசீலிப்பதற்காக ஒரு மேன்முறையீட்டில் வெற்றி பெற்றுள்ளார். இவரது அடையாளம் வெளியிடப்படவில்லை, மேலும் அவருக்கு அநாமதேய உரிமை வழங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.




ஆறு பிரித்தானியர்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்த இந்தத் தொடர் தாக்குதல்கள் ஆடம்பர ஹோட்டல்களையும் தேவாலயங்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டன. இவர் 2022 செப்டம்பரில் பிரித்தானியாவுக்கு வந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு அரசியல் புகலிடம் கோரியுள்ளார். குடிவரவு தீர்ப்பாயத்தில் அவர் வாதிடுகையில், தான் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு இலங்கை பொலிஸார் தனது குடும்ப வீட்டிற்கு வந்ததாகவும், மீண்டும் இலங்கைக்குச் சென்றால் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுக்கிறார்.

அவரும் அவரது மனைவியும் கோரிய புகலிடக் கோரிக்கை, அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்டதால், பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால் முதலில் நிராகரிக்கப்பட்டது. ஆனால், உயர் குடிவரவு தீர்ப்பாயத்தில் அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டில், முந்தைய விசாரணையில் சட்டரீதியான பிழைகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. துணை உயர் தீர்ப்பாய நீதிபதி கிளேயர் பர்ன்ஸ், சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்பதையும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதையும் சரியாக மதிப்பிட நீதிபதி தவறிவிட்டார் என்று தீர்ப்பளித்துள்ளார். இதன் காரணமாக, அவரது வழக்கு ஆரம்பத்தில் இருந்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.




சந்தேகநபர் 2022 ஜனவரி 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும், பெரும் இலஞ்சம் வழங்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) எனப்படும் இஸ்லாமிய ஆயுதக் குழுவே இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானியர்களில் அமிதா நிக்கல்சன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள், லோரெய்ன் கேம்ப்பெல், பில் ஹாரோப் மற்றும் டாக்டர் சாலி பிராட்லி ஆகியோரும் அடங்குவர். கொழும்பில் உள்ள ஷங்ரி-லா மற்றும் சினமன் கிராண்ட் போன்ற முக்கிய ஹோட்டல்களில் இந்த வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அந்நாட்டின் புகலிடக் கோரிக்கை அமைப்பில் விரிவான சீர்திருத்தங்களை அறிவித்துள்ள பின்னணியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. புதிய சட்டங்கள் புகலிட நிலையை தற்காலிகமாக்கவும், பாதுகாப்பானது எனக் கருதப்படும் சந்தர்ப்பங்களில் குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பவும் அமைச்சர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளன. சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கும் வெளிநாட்டு குற்றவாளிகளுக்கும் மனித உரிமைச் சட்டங்களைப் பயன்படுத்தி நாடுகடத்தப்படுவதற்கு எதிராகப் போராடும் திறனைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சந்தேகநபரின் இந்த வழக்கு விசாரணை குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர், சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதி ஒருவரை பிரித்தானிய மண்ணில் நுழைய அனுமதிக்காத வகையில் அரசாங்கம் இந்த புகலிடக் கோரிக்கையை நிராகரித்ததாகக் குறிப்பிட்டார். நீதிமன்றத்தில் அந்த முடிவிற்காக உறுதியாக வாதிடுவோம் என்றும் அவர் வலியுறுத்தினார். மனித உரிமைச் சட்டங்களை சீர்திருத்துவதன் மூலமும், மேன்முறையீட்டு அமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் மூலமும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு பிரித்தானியா ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post