ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் அவசரகாலச் சட்ட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். அனர்த்த சேவைகளுக்காக இராணுவத்தை அழைப்பதற்கு சட்டரீதியான வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் அமைதியையும் பேணுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆயுதப் படை உறுப்பினர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 2025 நவம்பர் மாதம் 28 ஆம் திகதியிடப்பட்ட 2464/30 ஆம் இலக்கத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பொது அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் நல்வாழ்வையும் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்களையும் சேவைகளையும் தடையின்றிப் பேணுவதற்கு ஆயுதப் படைகளின் தலையீடு அத்தியாவசியமானது என ஜனாதிபதி கருதுகிறார். 1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், தேசிய அரச சபையின் 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், அத்துடன் 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்ட, 40 ஆம் அத்தியாயமான பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு 2025 நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆயுதப் படைகளை அழைப்பதற்குப் பொருந்தும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கட்டளையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமானாயக்கவினால் கொழும்பில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
