ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈ-ஸ்கூட்டர் விபத்தில் 10 வயது சிறுவன் பலி

10-year-old-child-dies-in-uae-e-scooter-accident

 ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல் குவைன் (Umm Al Quwain) பகுதியில் ஈ-ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உம் அல் குவைன் பொலிஸார் உறுதிப்படுத்தியபடி, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 10:00 மணியளவில் கிங் பைசல் (King Faisal) வீதியில் பதிவாகியுள்ளது.



போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறையின் பிரதிப் பணிப்பாளர் கேர்ணல் மொஹமட் ஒபைத் அல் முஹைர் தெரிவித்தபடி, சிறுவன் வீதியில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிறுவன் பலத்த காயமடைந்ததாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த அவசர அழைப்பை அடுத்து, போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன.


விபத்து நடந்தபோது ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், பின்னர் உயிரிழந்தான்.

விபத்தில் சம்பந்தப்பட்ட ஆசிய நாட்டைச் சேர்ந்த சாரதி விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளில், சிறுவன் ஈ-ஸ்கூட்டரை வீதியில் வாகனங்கள் செல்லும் திசைக்கு எதிர் திசையில் ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது. சிறுவனுக்கு மேலும் ஐந்து சகோதர சகோதரிகள் இருப்பதாகவும்,


குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தெரியாமல் மூத்த சகோதரனுக்குச் சொந்தமான ஈ-ஸ்கூட்டரை சிறுவன் எடுத்துச் சென்றதாகவும் சிறுவனின் உறவினர் ஒருவர் கல்ஃப் நியூஸ் (Gulf News) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான கார் மிகக் குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகவும், சாரதி வாகனத்தை நிறுத்துவதற்கு (Park) முயற்சித்துக் கொண்டிருந்ததாகவும் அந்த உறவினர் மேலும் தெரிவித்தார். குடும்பத்தினர் கூற்றுப்படி, கார் மோதிய நேரடி தாக்கத்தால் சிறுவன் உயிரிழக்கவில்லை, மாறாக மோதிய பிறகு நடைபாதையில் விழுந்து தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் இரத்தப்போக்கு காரணமாகவே உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post