தீவின் பாதகமான காலநிலை காரணமாக பாடசாலைக் கல்வி முறைக்கு ஏற்பட்ட தடைகளை நிர்வகித்து, மீண்டும் பாடசாலைகளைத் திறப்பது மற்றும் பரீட்சை நடவடிக்கைகளை நடத்துவது தொடர்பாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இன்று (09) ஊடகங்களுக்கு விசேட விளக்கமளித்தார்.
தீவின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்த பின்னர், நாட்டின் மொத்தமுள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வழமைபோல ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செயலாளர் அங்கு தெரிவித்தார்.
அனர்த்த நிலைமையின் தாக்கம் காரணமாக 147 பாடசாலைகள் இன்னும் மீண்டும் திறக்க முடியாத நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,
எதிர்காலத்தில் மாகாண மட்டத்தில் கிடைக்கும் உறுதிப்படுத்தல்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மாணவர்களுக்காக திறக்கப்படுவதற்கு முன்னர், டிசம்பர் 15 ஆம் திகதி அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஆடைகள் தொடர்பாக நெகிழ்வான கொள்கை பின்பற்றப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின்னர் டிசம்பர் 29 முதல் 31 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2026 ஜனவரி 02 வரையும் பாடசாலைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மோசமான காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சை நடவடிக்கைகள் 2026 ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும், அது தொடர்பான மேலதிக தகவல்கள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் அறிவிக்கப்படும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், ஒரு விசேட தீர்மானமாக, 9926 பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் தவணைப் பரீட்சையை இரத்து செய்யவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்குப் பதிலாக, அடுத்த வருடம் ஒரு ஒத்திகை பரீட்சை நடத்தப்படும், மேலும் பரீட்சை இன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் 6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்படுவார்கள்.
அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி மாதம் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி பெப்ரவரி மாதத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாலக கலுவெவ மேலும் தெரிவித்தார்.
Tags:
Education