பதுரலிய, களுக்கல சந்திக்கருகில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த அவர் கார் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவன் பதுரலிய, இலுக்க்பத்த, டெல்கிட் தோட்டத்தில் வசிக்கும் விஜயகுமார் திலான் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து பதுரலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுக்கல சந்திக்கருகில் இடம்பெற்றுள்ளது. பதுரலியிலிருந்து அகலவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகலவத்தை பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான கார் ஒன்றும், அகலவத்தையிலிருந்து பதுரலிய நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 21 வயதுடைய நவராஜா கசுன் என்பவர் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் சாரதியும் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுரலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசன்ன வேதிசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் பதுரலிய பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.