
கொழும்பில் அமைந்துள்ள பிரபலமான பாடசாலையான நாலந்தா கல்லூரியின் பிரதம மாணவர் தலைவருக்கும், அதே கல்லூரியின் ஆசிரியைகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அநாகரிகமான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் நாலக கலுவெவ, சம்பந்தப்பட்ட கல்லூரியின் அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பாடசாலையின் பிரதம மாணவர் தலைவர் என குறிப்பிடப்படும் மாணவர், பல சந்தர்ப்பங்களில் அதே பாடசாலையின் மூன்று ஆசிரியைகளுடனும், மற்றுமொரு மாணவரின் தாயாருடனும் காணொளி தொழில்நுட்பம் ஊடாகத் தொடர்புகொண்டு நிர்வாணமாக அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவி வருகின்றன.
இந்த சர்ச்சைக்குரிய காணொளிகள் மற்றும் சம்பவம் குறித்து கல்வி அமைச்சின் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கல்விச் செயலாளர், அதிபரால் வழங்கப்படும் ஆரம்ப அறிக்கையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், அதிபரின் உத்தியோகபூர்வ அறிக்கை கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை இடைநிறுத்தவோ அல்லது அவர்களுக்கு எதிராக வேறு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவோ முடியாது என்றும் கல்விச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.