'தித்வா' சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, நாட்டின் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 855 மத வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (10) வரை பெறப்பட்ட தரவுகளின்படி இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த இடங்களுள் 415 பௌத்த விகாரைகள், 185 இந்து ஆலயங்கள், 157 முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் 98 கிறிஸ்தவ தேவாலயங்கள் அடங்குவதாக அமைச்சு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, அதிக எண்ணிக்கையிலான மத வழிபாட்டுத் தலங்கள் கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு அனைத்து மதங்களையும் சேர்ந்த 93 இடங்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் 92 மத வழிபாட்டுத் தலங்களும், கொழும்பு மாவட்டத்தில் 83 இடங்களும் சேதமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு அதிக சேதம் கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது, அங்கு 66 விகாரைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியாவில் 57, புத்தளத்தில் 51 மற்றும் கேகாலையில் 50 பௌத்த விகாரைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்து மத வழிபாட்டுத் தலங்களுக்கு அதிக பாதிப்பு திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கு 44 இடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 இந்து ஆலயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் 47 முஸ்லிம் பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளதால், அந்த மதப் பிரிவில் அதிக சேதம் அந்த மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அதிக பாதிப்பு மன்னார் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது, அங்கு 20 தேவாலயங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சேதங்கள் குறித்த கணக்கீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த புள்ளிவிவரங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
News