உயர்தரப் பரீட்சைக்கான புதிய கால அட்டவணை வெளியீடு

new-al-exam-schedule-to-be-announced

 சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் நேற்று (10) வெளியிட்டது. புதிய கால அட்டவணைக்கு அமைய, எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முற்பகல் இல்லப் பொருளியல் பாடமும், பிற்பகல் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தின் முதலாம் வினாத்தாளும் நடைபெறவுள்ளன.



ஜனவரி 13ஆம் திகதி முற்பகல் கணக்கியல், அரபு மற்றும் சீன மொழிப் பாடங்கள் நடைபெறும். அதே நாளில் பிற்பகல் இலங்கை வரலாறு மற்றும் மலாய் மொழிப் பாடங்கள் நடைபெறும். ஜனவரி 14ஆம் திகதி முற்பகல் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தின் இரண்டாம் வினாத்தாளும், பிற்பகல் இந்தி மற்றும் கொரிய மொழிப் பாடங்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




ஜனவரி 16ஆம் திகதி முற்பகல் கணிதம் முதலாம் வினாத்தாள், உயர் கணிதம் முதலாம் வினாத்தாள், கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகம், ரஷ்ய மற்றும் ஜப்பானிய மொழி முதலாம் வினாத்தாள் பரீட்சைகள் நடைபெறும். அதே நாளில் பிற்பகல் புவியியல் முதலாம் வினாத்தாள் நடைபெறும். ஜனவரி 17ஆம் திகதி முற்பகல் கணிதம் இரண்டாம் வினாத்தாள், ரஷ்ய மற்றும் ஜப்பானிய மொழி இரண்டாம் வினாத்தாள்கள் நடைபெறும். அதே நாளில் பிற்பகல் புவியியல் இரண்டாம் வினாத்தாள் நடைபெறவுள்ளது.

ஜனவரி 19ஆம் திகதி முற்பகல் இந்தி இரண்டாம் வினாத்தாள் மற்றும் கொரிய மொழி இரண்டாம் வினாத்தாளும், பிற்பகல் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள் முதலாம் வினாத்தாளும் நடைபெறும். பரீட்சையின் இறுதி நாளான ஜனவரி 20ஆம் திகதி முற்பகல் உயர் கணிதம் இரண்டாம் வினாத்தாள் மற்றும் கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகம் இரண்டாம் வினாத்தாளும், அதே நாளில் பிற்பகல் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள் இரண்டாம் வினாத்தாளும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.




தற்போதுள்ள அனர்த்த நிலைமை காரணமாக தமக்குரிய பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் உடனடியாக தமது அதிபருக்கு அறிவிக்க வேண்டும். அதிபர்கள் அந்தத் தகவலை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும். அத்துடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமக்குரிய பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் சிரமங்கள் இருந்தால், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர அழைப்பு இலக்கம் அல்லது 011 2784537, 011 278 6616 மற்றும் 011 278 4208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post