தெஹியத்தகண்டிய, உத்தரபுர மயானத்தில் விஷம் குடித்த தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றச் சென்ற மகன், அதி சக்தி வாய்ந்த மின் கம்பியில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் தெஹியத்தகண்டிய பொலிஸாரால் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் தெஹியத்தகண்டிய, நிக்கவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ்.எச்.ஜி. சானக்க மதுஷான் என்ற இளைஞர் ஆவார்.
உயிரிழந்த இளைஞரின் தந்தை ஒரு வகை விஷத்தை அருந்திய பின்னர், சானக்க மதுஷான் தந்தையை தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். தந்தை அருந்திய விஷப் போத்தலைக் கண்டுபிடித்து வருமாறு வைத்தியசாலையின் மருத்துவர்கள் மதுஷானுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, விஷப் போத்தலைத் தேடி தெஹியத்தகண்டிய, உத்தரபுர மயானத்திற்குச் சென்ற மதுஷான், பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த அதி சக்தி வாய்ந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்ததாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, இந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இணைந்து ஒரு அங்கீகரிக்கப்படாத வனப்பகுதியில் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த பயிர்ச்செய்கைகளை பன்றிகளிடமிருந்து பாதுகாக்க அதி சக்தி வாய்ந்த மின் கம்பிகளை அமைத்துள்ளனர். மயானத்தில் விஷம் குடித்த தந்தையின் போத்தலை எடுத்துவரச் சென்றபோதே மதுஷான் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். விஷம் குடித்த தந்தையின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்ற முடிந்தாலும், மகன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது குறித்து தெஹியத்தகண்டிய கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையத்தின் பதில் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குணவர்தனவின் ஆலோசனைக்கமைய, சிறு முறைப்பாடுகள் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஏ. சுசந்த, உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஜயவர்தன, பொ. சா.(23015) குமார மற்றும் பொ. கொ.(78998) விஜேதுங்க ஆகிய உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்படி, தெஹியத்தகண்டிய, உத்தரபுர கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.