தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலப்பலாவல விளையாட்டு மைதானத்தில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருளை உடலுக்குள் செலுத்திக்கொண்ட மூன்று இளைஞர்களில் ஒருவர் நேற்று முன்தினம் (20) மாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், ஆபத்தான நிலையில் இருந்த 24 வயதுடைய தரிந்து லக்ஷான் குமார என்ற இளைஞராவார். மாம்பிட்டிய பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞரின் மரணப் பரிசோதனை நேற்று (21) பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பாலித பண்டார சுபசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டது. மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டு, விரிவான அறிக்கைக்காக உடலின் பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞருடன் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருளை உடலுக்குள் செலுத்திக்கொண்ட மற்றைய இரண்டு இளைஞர்களிடமிருந்தும் நேற்று (21) நண்பகல் வரை பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்யாதது தொடர்பில் பிரதேசவாசிகள் பேராதனை வைத்தியசாலையின் சவக்கிடங்குக்கு அருகில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், உயிரிழந்தவர் மேலும் இரண்டு இளைஞர்களுடன் ஏதோ ஒரு பொருளை செலுத்திக்கொண்டதை கண்டதாக 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தவுலகல பிரதேசத்தில் ஒரு வைத்தியர் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், இது தொடர்பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பிரதேசவாசிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இதற்கிடையில், சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருளை செலுத்திக்கொண்ட பின்னர் உயிரிழந்த இளைஞருக்கு கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் மற்றைய இரண்டு இளைஞர்களில் ஒருவர் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.