தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணம் வழங்கும் நோக்குடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) காலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் அவர்களைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதுடன், அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை நாட்டை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் விளக்கினார். குறிப்பாக, சூறாவளி நிலைமை காரணமாக உள்நாட்டு வணிகங்கள் வீழ்ச்சியடைதல், சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுதல் அத்துடன் பல உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட பாரிய அழிவுகள் குறித்து சஜித் பிரேமதாச
உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
அழிவடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் புனரமைப்பதற்கும், இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அது தொடர்பாக அனைத்து இலங்கை மக்களுக்காகவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
Tags:
Political