இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த அம்பிட்டியே சுமனா தேரரை பிணையில் விடுவிக்க மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை சட்டத்தை (ICCPR) மீறி, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.ஜே. பிரபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.கடந்த நவம்பர் 14 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிரதிவாதியை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து, அவரது வெளிநாட்டுப் பயண அனுமதிப்பத்திரத்தை நீதிமன்றப் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவும் உத்தரவிட்டார். அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் அளிக்குமாறும் பிரதிவாதிக்கு உத்தரவிடப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, பிரதிவாதி நீதிமன்றத்தை தவிர்த்து வந்ததாகவும், சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பிரதிவாதி சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரல, அண்மையில் நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக கண்டி தெல்தெனிய விகாரையில் மண்சரிவுகள் ஏற்பட்டதாகவும், அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் தனது கட்சிக்காரரால் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் பதிலளித்தார்.
அத்துடன், சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டு தற்போது இரண்டு வருடங்கள் கடந்துள்ளதாகவும், அதன் பின்னர் பிரதிவாதி எந்தவொரு அவதூறான அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் சுட்டிக்காட்டிய பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி, அவருக்கு முன்னர் எந்தக் குற்றங்களும் இல்லாததால் பொருத்தமான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்குமாறு கோரினார். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிடியாணை உத்தரவை மீளப் பெற்றுக்கொண்டு பிரதிவாதியை பிணையில் விடுவிக்க தீர்மானித்ததுடன், வழக்கை அடுத்த ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
Tags:
News