2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண முறைகேடுகள் உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலின்படி, அரசுக்கு பாரிய சொத்து மற்றும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையினால் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியவில்லை என்றும் குற்றம் சாட்டி ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த முறைப்பாடுகள், குற்றச்சாட்டுகள் மற்றும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது, பொறுப்பானவர்களை அடையாளம் காண்பது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நாட்டின் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக அவற்றை விசாரித்து பரிசோதிப்பது அத்தியாவசியமானது என அந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தவறுகளை விசாரிப்பதற்கும், பரிசோதிப்பதற்கும், அது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் அத்துடன் தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் ஒரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணை ஆணைக்குழுவிற்கு பின்வரும் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
* சட்டத்தரணி பியசேன ரணசிங்க – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி
* ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏகநாயக்க – இலங்கை கணக்காய்வு சேவையின் சிரேஷ்ட முதலாம் தர அதிகாரி
* டி.எஸ். விக்ரமசிங்க – முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
மேலும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி பியசேன ரணசிங்க அவர்கள், இந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுவிற்கு, ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஒரு இடைக்கால அறிக்கையையும், அதன் பின்னர் மாதாந்தம் மேலும் இடைக்கால அறிக்கைகளையும், கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.