
எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி ஒரு விவசாயியைக் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி, பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் நேற்று (10) தீர்ப்பளித்தது. அந்த அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட பணத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஒன்பது இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான டி. எம். லக்ஷ்மன் தென்னக்கோன் என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் தனது பண்ணைக்குச் சென்று கொண்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதுடன், பின்னர் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்தச் செயல்முறையின் மூலம் சம்பந்தப்பட்ட விவசாயியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக எஸ். துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்தது.
நொச்சியாகம பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயதிலக்க, அனுராதபுரம் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர். எம். எஸ். சி. ரத்நாயக்க, பொலிஸ் சார்ஜன்ட் ரத்நாயக்க, பொலிஸ் சார்ஜன்ட் அசேல (17176) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பண்டார ஆகிய ஐந்து அதிகாரிகளுக்கே இவ்வாறு நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது.
மனுதாரரான விவசாயி சார்பில் சட்டத்தரணி அரவிந்த சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜரானார். சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாரத்ன ஆஜராகி விடயங்களை முன்வைத்தார்.
Tags:
News