மிஹிந்தலையில் யானைக்கு தீ வைத்து கொன்ற சம்பவம்: சஜித் பிரேமதாச கடும் சீற்றம்!

sajith-is-angry-over-the-burning-of-an-elephant-in-mihintale

 மிஹிந்தலை சீப்புக்குளம் பிரதேசத்தில் யானைக்கு தீ வைத்து கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.



அனுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை, அம்பகஹவெவ பிரதேசத்தில் சிலரால் இந்த யானைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், இது மிகவும் இழிவான, கேவலமான மற்றும் அருவருப்பான செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சமூக ஊடகங்கள் ஊடாக விசேட செய்தியொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.




இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயல்களைத் தடுப்பதற்கு அரசாங்கம், வனவிலங்குத் திணைக்களம் மற்றும் சிவில் சமூகம் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட விலங்குக்கு சிகிச்சையளிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வனவிலங்கு கால்நடை வைத்தியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்த பிரேமதாச, இவ்வாறான இழிவான செயல்களை முழு நாடும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும் என்றும், அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் எவரும் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் தாமதமின்றி அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு சூழலியல் ஆர்வலர் என்ற வகையில் இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையில் யானை-மனித மோதல் தீவிரமடைந்து வருவதால், அதைக் குறைப்பதற்கு சமூக அடிப்படையிலான தெளிவான வேலைத்திட்டம் அவசியம் என்றும் தெரிவித்தார்.




யானை-மனித மோதலைத் தீர்ப்பதற்கும் மனித மற்றும் யானை உயிர்களைப் பாதுகாப்பதற்கும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தெரிவித்த அவர், வளப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குத் திணைக்களத்திற்கு போதுமான மனித மற்றும் பௌதீக வளங்களை வழங்கி பலப்படுத்த வேண்டும் என்றும், யானை-மனித மற்றும் வனவிலங்கு மோதல்கள் நிலவும் பிரதேசங்களில் பாடசாலை மட்டத்தில் இருந்து தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

யானை-மனித மோதலைத் தடுப்பதற்கான தெளிவான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கம் தவறிவிட்டது என்றும், இதனால் இதற்கான அவசர தேசிய திட்டம் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

gossiplanka image 1

Post a Comment

Previous Post Next Post