தீவு முழுவதும் 14 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான இடங்களில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதிவீர தெரிவித்தார். குறிப்பாக, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய மலைப்பாங்கான மாவட்டங்கள் இவற்றில் முதன்மையானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மேலதிகமாக, மொனராகலை, குருநாகல், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில இடங்களிலும் நிலச்சரிவுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 30 சதவீதமான பகுதி நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும், இது சுமார் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு என்றும் சிரேஷ்ட புவியியலாளர் நேற்று (12) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த அபாய வலயங்களில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 34 சதவீதமானோர் வாழ்கின்றனர் என்றும் சேனாதிவீர அங்கு வெளிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஆபத்தான சூழ்நிலைகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களில் வசித்த 15,000 இற்கும் மேற்பட்டோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முன்னர் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலைகளில் ஏற்பட்ட உயிர் இழப்புகளில் பெரும்பாலானவை மண்மேடுகள் சரிந்ததாலேயே ஏற்பட்டன என்றும், இது குறித்து மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கலாநிதி வசந்த சேனாதிவீர மேலும் வலியுறுத்தினார்.
Tags:
Trending