கம்பளை, துனுகேஉல்ல பிரதான வீதியில் அமைந்துள்ள இஹலகம சவக்கிடங்கு, திட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் மழையினால் நிலச்சரிவுக்கு உள்ளாகி, அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலங்களும் சவப்பெட்டிகளும் வீதிக்கு வந்து ஒரு மாதமாகியும், அவற்றை அகற்ற அதிகாரிகள் இதுவரை தலையிடவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த அனர்த்த நிலை கடந்த 27ஆம் திகதி பதிவாகியுள்ளது.
அதிகாரிகளுக்கு இது குறித்து ஒரு மாத காலமாக அறிவிக்கப்பட்டிருந்தும், இதுவரை அவர்கள் கவனம் செலுத்தாததால், அப்பகுதி மக்கள் கடும் நோய் அச்சத்தில் உள்ளனர். மேலும், வீதி தடைபட்டுள்ளதால் துனுகேஉல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதேசவாசியான திருமதி ஜயந்தி குமாரி, "நிலச்சரிவால் சவக்கிடங்கில் புதைக்கப்பட்டிருந்த நான்கு சடலப் பெட்டிகள் வெளியே வந்து வீதிக்கு வந்துள்ளன. இன்றுடன் ஒரு மாதமாகப் போகிறது. நாங்கள் உடபலாத்த பிரதேச செயலாளருக்கு இது குறித்து அறிவித்தோம். ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. நாங்கள் இப்போது நிர்க்கதியாக உள்ளோம். அழுகி, சேற்றில் மூழ்கியுள்ள இந்த சடலங்களால் ஆபத்தான நோய்கள் பரவக்கூடும்" என்றார்.