சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் வர்ண இரவு நிகழ்வு தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபரிடம் அறிக்கை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,
அந்த அறிக்கை கிடைத்த பின்னர், சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற வர்ண விருது வழங்கும் விழாவில் அதிபர் தனக்கு அநீதி இழைத்ததாகக் குற்றம்சாட்டி மாணவி ஒருவர் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. பல வெற்றிகளைப் பெற்றிருந்த போதிலும், வர்ண விருது வழங்கும் விழாவின் ஒத்திகைகளில் கலந்துகொள்ளாத காரணத்தினால் தனக்கு விளையாட்டு விருது மறுக்கப்பட்டதாக குறித்த மாணவி அதில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த காணொளி இணையத்தில் வெளியானதை அடுத்து, அது குறித்து பரந்த பொது விவாதம் மற்றும் கலவையான கருத்துக்கள் உருவாகியுள்ளன.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஸ்குவாஷ் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபட்ட இரு மாணவிகளும் பாடசாலைக்கு பெருமையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர்கள் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தகுதியான விளையாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவின் மூலம் இதில் தலையிட்டு, நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு அச் சங்கம் பாடசாலை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த விசாரணை முடிந்ததும் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள பழைய மாணவர் சங்கம், அதுவரை சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு பாதகமான அல்லது பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான அறிக்கைகள் மற்றும் பதிவுகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
Tags:
Trending