
மகரகம, நாவின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் அருகே பாடசாலை வயதுடைய இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்ததில், இரு மாணவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 06ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக மகரகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் முன்னால் ஒரே வயதுடைய இந்த சிறுவர் மாணவர் குழுக்களுக்கிடையில் ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வாக்குவாதம் கட்டுப்பாட்டை மீறி மோதலாக மாறிய பின்னர் கத்தியால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், 16 வயதுடைய நுகேகொட மற்றும் மீகொட தாம்பே பிரதேசங்களைச் சேர்ந்த இரு மாணவர்கள் ஆவர்.
மாணவர்களை கத்தியால் தாக்கி காயப்படுத்திய சந்தேகத்திற்கிடமான மாணவர்களை கைது செய்ய மகரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மகரகம பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Tags:
News