
குலியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் கே.ஏ.ஆர். ஜயதிலக்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது கடமைகளுக்காக சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வைத்தியசாலைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டியை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டி, வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள் மற்றும் இளநிலை ஊழியர்கள் குழுவொன்று அமைச்சிற்கு சமர்ப்பித்த முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
பணிப்பாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அண்மையில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் குழுவொன்று வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பணிப்பாளர், நோயாளர்களின் நலனை முன்னிறுத்தி வைத்தியசாலையில் தான் மேற்கொண்ட மாற்றங்கள் காரணமாக தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் முதல் மாலை 4.00 மணிக்குப் பிறகு இயங்காத வெளிநோயாளர் பிரிவின் பணிகளை இரவு 8.00 மணி வரை நீடித்ததற்கும், ஊழியர்கள் உரிய நேரத்தில் கடமைக்கு சமூகமளிக்காத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தான் தலையிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மருத்துவ கிளினிக்குகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்கள் உரிய நேரங்களில் கட்டாயமாக கடமையில் இருக்க வேண்டும் என்ற விதிகளை கடுமையாக்கியதுடன்,
கடமை நேரங்களில் விசேட வைத்தியர்கள் தனியார் மருத்துவ சேவையில் ஈடுபடுவதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் வைத்தியர் ஜயதிலக்க குறிப்பிட்டார். நோயாளர் பராமரிப்பை ஒழுங்குபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த கடுமையான முடிவுகள் காரணமாகவே தனக்கு எதிராக சிலர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த இடமாற்றத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Tags:
News